தெரு நாய் கடியிலிருந்து காப்பாற்ற அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில், குரோம்பேட்டையை சேர்ந்த தேன்மொழி (55) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, தெரு நாய் துரத்தியதில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தி வர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் வேப்பிலை, அர்ச்சனை பழம், பூ தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று தெரு நாய்களின் கடியில் இருந்து எங்களை காப்பாற்று தாயே என கோஷமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, கருமாரி அம்மனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தெருநாய் துரத்தியதில் கீழே விழுந்து பலியான தேன்மொழி குடும்பத்திற்கு, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினர்.

Related Stories: