ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிட முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கருப்புக்கொடி காட்டிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

ஊட்டி: ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஊட்டியில் கருப்பு கொடி காட்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மசோதாவை 2வது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி ராஜ்பவனில் தங்கி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நேற்று ராஜ்பவன் முற்றுகை மற்றும் கருப்புக்கொடி போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த சூழலில், நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்வதாக இருந்த ஆளுநர், காலை 7.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன், கேரள மாநிலம் வைத்திரி புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், வினோத், தாலுகா செயலாளர் நவீன்சந்திரன், இந்திய கம்யூ.  மாவட்ட செயலாளர் போஜராஜ், மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட 16 பேர் ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் அருகே ஊர்வலமாக வந்து முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகையிட முயன்ற 16 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால், பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: