என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: அதிமுக எம்எல்ஏ கைது

கடலூர்: என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணி நேற்று காலை துவங்கியது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று என்எல்சி நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தியது.

இப்பணிக்கு ஏதேனும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஜெகன் கார்த்தி, உள்ளிட்ட சுமார் 30 பேர் நேற்று வளையமாதேவி கிராமத்திற்கு செல்வதற்காக சேத்தியாத்தோப்பு பகுதிக்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் வருகின்ற 11-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். இதனையடுத்து என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வளையமாதேவி கிராமத்திற்க்கு புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் சென்றார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: