காசாங்குளம் வடகரையில் ரூ.2.74 கோடியில் புதிய மார்க்கெட் கட்டும் பணி

*தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

பட்டுக்கோட்டை :  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை முழுமையாக தடை செய்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.முதலில் பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களுக்கு மாற்றுப்பொருட்கள் அடங்கிய சிறிய கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுவாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, ரெட்கிராஸ் அமைப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு, பெரியதெரு, காசாங்குளம் முதல் சந்து வழியாகவந்து நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் நெகிழி பொருட்களை முழுமையாக தடை செய்தல் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி வந்தனர்.

இதனிடையே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தண்டுவடம் பாதித்தவர்களுக்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இயற்கை மருத்துவம் குறித்து டாக்டர் அமிர்தவர்ஷினி உடற்பயிற்சி அளித்தார். சித்த மருத்துவம் குறித்து சித்த மருத்துவர் டாக்டர் அருண்குமார் தைலம் மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கினார்.

தொடர்ந்து ரூ.2 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் காசாங்குளம் வடகரையில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய மார்க்கெட் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,தண்டுவடம் பாதித்தவர்களுக்காக 2வது கட்டமாக இன்று (நேற்று) பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்பதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. நெகிழி மேலாண்மை விதிகளை முழுமையாக அமல்படுத்த (நாளை) இன்று முதல் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு செய்யப்படும். தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சிறிய வணிகர்களுக்கு ரூ.1,000, பெரிய வணிகர்களுக்கு 10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். எனவே நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Related Stories: