கலசபாக்கம் அருகே செய்யாற்றில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் மேலும் 5 கற்தூண்கள் கண்டெடுப்பு

* பழமை வாய்ந்த கோயில் புதையுண்டு உள்ளதா?

* ஜேசிபி மூலம் தோண்டும் பணி தொடங்கியது

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே உள்ள செய்யாற்றில் தீர்த்தவாரிக்காக பள்ளம் தோண்டியபோது கற்தூண்கள் கிடைத்த இடத்தில், 100 நாள் தொழிலாளர்கள் மூலம் மேலும் 5 கற்தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை பழங்கால கோயிலின் மேற்கூரை பாகங்கள் போன்று உள்ளதால், கோயில் ஏதேனும் புதையுண்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டு பணி தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தில் கரைகண்டேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டு விஜயநகர மன்னர்கள் உள்ளிட்டோரால் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடந்தது. அதன் பின்னர் நடத்தப்படவில்லை.

எனவே இந்த ஆண்டு மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடத்த முடிவு செய்யப்பட்டது இதை யொட்டி எலத்தூர் கிராமத்தில் செய்யாற்றை இரண்டு நாட்களுக்கு முன்பு சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது செய்யாற்றில் கற்தூண்கள் கிடைத்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோயில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் எம்எல்ஏக்கள் பெ.சு.தி. சரவணன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிலையில் செய்யாற்றில் மேலும் கல்வெட்டுகள் அல்லது சிலைகள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அவற்றை ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி தேடினால் சிலைகள் உள்ளிட்டவை சேதமாகும் என்பதால் எம்எல்ஏக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆலோசனை நடத்தினர். எனவே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி பள்ளம் தோண்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காலை 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு ஆற்றில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. இதில் மேலும் 5 கற்தூண்கள் கிடைத்துள்ளன. அவை பழங்கால கோயிலின் மேற்கூரை பாகங்களை போன்ற இருப்பதால், ஏதேனும் கோயில் புதையுண்டு இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். தொடர்ந்து இப்பணிகளை தொழிலாளர்கள் செய்ய முடியாத சூழல் உள்ளதால் நேற்று மாலை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இரண்டாவது கட்டமாக பள்ளம் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதில் மேலும் அறிய வகை சிற்பங்கள், கல்வெட்டுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிதாக வேறு ஏதேனும் கல்வெட்டுகள் அல்லது சிலைகள் கிடைத்தால் உடனுக்குடன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.

Related Stories: