நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா: அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் விழாக்களில்  முக்கியமானது மாசி பெருந்திருவிழா. இதையொட்டி முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூங்குழி இறங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் நேற்றிரவு முதலே அலகு குத்தி அக்னிச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை கோயில் முன்பாக காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றப்பட்டது.

பின்னர் காமராஜ் நகர்  பொதுமக்களால் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கழுகு மரத்தின் அடையாளத்தை சென்று தொட்டதை தொடர்ந்து  கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதலாவதாக கோயில் பூசாரி இறங்கியதை தொடர்ந்து பக்தர்கள் இரவு வரை இறங்குவர். பின்னர் கம்பம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அம்மன் குளத்தில் கொண்டு போய் விடப்படும். நாளை காலை அம்மன் மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அன்றிரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோயிலை சென்றடைவார்.

இத்துடன் இத்திருவிழா நிறைவடையும். பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆலோசனையின் பேரில் நிர்வாக அலுவலர் சரவணக்குமார் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள் குடிநீர் வசதி மற்றும் சுகாதார பணிகளை செய்து வருகின்றனர். விழாவையொட்டி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சூரியன், பூசாரி வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: