சின்னமனூர் அருகே குச்சனூர்-சங்கராபுரம் இணைப்பில் 3 கிமீக்கு தார்ச்சாலை பளபளக்குது: தமிழக அரசிற்கு பொதுமக்கள் பாராட்டு

சின்னமனூர்: திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் சாலை மேம்பாடு, தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், சாலை வசதி மற்றும் நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

புதிய சாலை பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் போடி அருேக கீழசொக்கநாதபுரம் விலக்கு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் சாலை பணிகளும் தீவிரமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, போடியின் சுற்றுப்பகுதி கிராமங்களில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும், சாலை சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபோல், சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி ராஜபாளையம் பிரிவிலிருந்து சங்கராபுரம் வரையில் 7 கிலோமீட்டர் இணைப்பு சாலை உள்ளது.

குச்சனூரிலிருந்து சங்கரபுரம் வரையில் குறுகிய சாலையாக இருந்ததால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 7 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, குறுகிய 6 பாலங்கள் அமைத்து 4 கிலோமீட்டர் சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் சங்கராபுரம் வரையில் 3 கிலோ மீட்டர் சாலை புதுப்பிக்கப்படாமல் இருந்தது. தற்போது ரூ.80 லட்சம் செலவில் 3 கிலோ மீட்டர் வரை தார்ச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய தார்ச்சாலையை தேனி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் பார்வையிட்டார். அப்போது, போடி கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் நிதிஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: