நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை கைது செய்ய தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1997ல் சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக தெய்வராணி என்பவர் பணியாற்றினார். 2002ல் தெய்வராணியை அப்போதைய பதிவாளர் வேலையில் இருந்து நீக்கம் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் தெய்வராணி வழக்கு தொடர்ந்தார். 2013ல் தெய்வராணிக்கு வேலை மற்றும் நிலுவை சம்பள தொகையை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது பதிவாளராக இருந்த தங்கவேலு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறினார்.

மேலும் தங்கவேலு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்றாததால் தெய்வராணி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நீதிமன்றம் அவமதிப்பாக கருதி பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட தொழிலாளர் நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 5க்கு ஒத்திவைத்தது. இதனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: