சென்னை, வேலூர் உட்பட 11 மாவட்ட இளைஞர்கள் அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர வாய்ப்பு: ஆன்லைனில் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை: அக்னிவீரர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், ஆன்லைன் மூலம் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சேர்ப்பு மைய இயக்குநர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குநர் கர்னல் மோனிஷ்குமார் பத்ரி தெரிவித்ததாவது:

அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு 2023-2024க்கான நேரடி ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. அதையொட்டி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே, அக்னிவீரர் மற்றும் வழக்கமான பணிகளுக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 1.10.2002 முதல் 1.4.2006 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். மேலும், தேர்வு கட்டணமாக ஆன்லைன் மூலம் ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆட்சேர்ப்பு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். அதன்படி, முதற்கட்டமாக, ஆன்லைன் மூலம் அடிப்படை எழுத்துத்தேர்வு நடத்தப்படும். அதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக ஆட்சேர்ப்பு பேரணி நடத்தப்பட்டு உடல் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.அக்னிவீரர் பொதுப்பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: