கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

தேனி: கஞ்சா, பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம் அளித்து உள்ளார். பெண் போலீசார் குறித்து அவதூறு பேசிய வழக்கில் கைதான யூடியூபர் சங்கர், தேனியில் அவர் தங்கியிருந்த அறை மற்றும் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 நாள் காவலில் விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீசார் யூடியூபர் சங்கரிடம் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு சங்கரை போலீசார் அழைத்து சென்றனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்காக சுமார் 100 கேள்விகள் வரை தயாரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையின்போது போலீசார், ‘கைது செய்த நாளன்று எதற்காக தேனி மாவட்டத்திற்கு வந்தீர்கள்’ என கேட்டனர். அதற்கு, மூணாறு செல்வதற்காக வந்ததாகவும், வரும் வழியில் தேனியில் தங்கியதாகவும் சங்கர் கூறியதாக தெரிகிறது. இதற்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு எத்தனை முறை வந்துள்ளீர்கள் என போலீசார் கேட்ட கேள்விக்கு, 4 முறை தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார், ‘உங்களுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதா’ எனக் கேட்டபோது, ‘எனக்கு கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் இல்லை. என்னுடைய டிரைவர், உதவியாளர் ஏன் அப்படி கூறினர் என்று தெரியவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

காரில் கஞ்சா இருந்தது எப்படி என கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையினருடன் தொடர்பு இருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு தமிழக அதிகாரிகள் சிலருடன் நட்பு இருப்பதாகவும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது’ என கேட்கப்பட்டதற்கு, அரசியல்வாதிகள், தகவல் தருபவர்கள் தனக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் ஏராளமான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் தொழிலதிபர்கள் யாரிடம் இருந்தும் பணம் பெறப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்து சங்கரை இன்று மதியம் மதுரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.

* விசாரணை முடிந்து யூடியூபர் பெலிக்ஸ் சிறையில் அடைப்பு
பெண் போலீஸ் குறித்து அவதூறு பேசிய சங்கரின் பேச்சை வெளியிட்டு கைதான யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுவை ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு திருச்சி மகிளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஜெயப்பிரதா அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நேற்று மதியம் 3 மணிக்கு பெலிக்ஸ் ஜெரால்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், போலீஸ் விசாரணையில் எவ்வித மனித உரிமை மீறலும் நடக்கவில்லை. உரிய மருத்துவ சிகிச்சை. உணவு, உடை வழங்கப்பட்டது என தெரிவித்தார். இதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டு மீண்டும் அடைக்கப்பட்டார்.

The post கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: