அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி சரகம் தேவர்கண்டநல்லூரில் உள்ள ஸ்ரீசரஸ்வதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை 1992ம் ஆண்டு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அரசே ஏற்றது. கடந்த 1993ம் ஆண்டு இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட நக்கீரனின் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

1997ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக 2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் நக்கீரனின் பெயர் இடம் பெறவில்லை. அவரை விட இளையவர்களுக்கு 2007ம் ஆண்டு முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பள்ளியை அரசு ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரரின் பணியை வரன்முறை செய்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் அரசு ஊழியர் தான். பதவி உயர்வு பெற அவருக்கு உரிமை உள்ளது. எனவே, அனைத்து பணப் பலன்களுடன் அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2015ம் ஆண்டு மார்ச் முதல் அவருக்கு உரிய சம்பள பாக்கியை வழங்கவேண்டும். இந்த நடவடிக்கைகளை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: