திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறார். தொடர்ந்து முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தனர்.

மேலும் பஸ், கார், வேன் மற்றும் ரயில்களிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து கோயிலில் குவிந்துள்ளனர். இதனால் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தால் கோயில் வளாகமே நிரம்பி வழிகிறது. கோயில் வளாகம் மற்றும் கடற்கரையில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நெல்லை – திருச்செந்தூர் இடையே இன்று(22ம் தேதி) 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அசைவ உணவு சமைக்க அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கானோர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: