புதுச்சேரி காந்தி திடலில் பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள், பூனைகள் கண்காட்சி: 130 செல்லப்பிராணிகள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி திடலில் நடைபெற்ற நாய்கள், பூனைகள் கண்காட்சியில் 130 செல்லப்பிராணிகள் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தது. புதுச்சேரி அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது. செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் புல்டாக், ஹஸ்கி, விப்பெட், டாபர்மேன், லேபர்டாக், டால்மேஷன், கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பட், ஸ்பிட்ஸ் உள்ளிட்ட 26 வகையான நாய்களும், 3 வகையான பூனைகளும் என மொத்தம் 130 செல்லப்பிராணிகள் பங்கேற்றன.

மேலும், இந்திய நாட்டின் வகைகளான தமிழ்நாட்டை சேர்ந்த வேட்டை ரக ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் பூனை அளவில் இருக்கும் உலகிலேயே சின்னஞ்சிறிய மினியேச்சர் பிஞ்சர் இன நாய்களும் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்தன. இறுதியாக, புதுச்சேரி காவல் துறையின் துப்பறியும் நாய் பிரிவு நாய்களின் சாகசமும் நடைபெற்றது. உள்ளூர், வெளியூர் என பல்வேறு வகையான 100க்கும் மேற்பட்ட நாய்கள் ஒரே இடத்தில் வலம் வந்தது பார்வையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கடற்கரைக்கு சுற்றுலா வந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நடுவர் குழுவினர் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் நாய்களின் உடல் வலிமை, தோற்றம் ஆகியவற்றின் மூலம் சிறந்த நாய்களை தேர்வு செய்தனர். இதில் கோல்டன் ரெட்ரீவர் இன நாய் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து, பரிசரிப்பு விழா நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டத்தை நாய் உரிமையாளர் ரிட்ஜென்னுக்கு சபாநாயகர் செல்வம் பரிசுக்கோப்பையை வழங்கினார். மேலும், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் துறையின் இயக்குநர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குநர் டாக்டர் குமரன் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள், டாக்டர்கள், கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: