திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேன் கூட்டால் நோயாளிகள் அச்சம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராட்சத தேன்கூடு உள்ளதால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி  மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தை மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கட்டிடத்தில் உள்ள 4வது மாடியில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கான வளாகப் பகுதியில் ஜன்னல் அருகே பெரிய தேன்கூடு உள்ளது. இதனால் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பெற்றோர்கள் மற்றும் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் அச்சத்துடன்  சிகிச்சை பெற்று வருகின்றனர். சில நேரம் தேனீக்கள் பறந்துவந்து நோயாளிகளை கொட்டி விடுவதாக தெரிகிறது. இதனால் நோயாளிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ‘’ நோயாளிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் தேன்கூட்டை தகுந்த பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: