மதுக்கரை, ஓதிமலையில் சிறுத்தை நடமாட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். குறிப்பாக வனத்தை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தைகள் தென்படுவதும், சில சமயங்களில் ஆடு, நாய் உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்வதும் உண்டு. இந்த நிலையில் நேற்று மாலை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில் பகுதியில் ஒரு சிறுத்தை தென்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதியில் சிறுத்தை இருந்துள்ளது.

இதனைப் பார்த்த பக்தர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பக்தர்களின் பேச்சு சத்தம் கேட்டு சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந்து மறைந்தது. இதேபோல சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை ஓதிமலை பகுதியில் சுற்றித்திரிவதாகவும், அப்பகுதியில் உள்ள நாய், கோழி, குரங்கு உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: