பாதுகாப்பு கேட்டு கோபி காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்

கோபி : கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.கோபி அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் சென்னி என்பவர் மகன் ஈஸ்வரமூர்த்தி(30).டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.அதே மில்லில் வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சங்கீதா(21) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அதே போன்று பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோயில்பாளையத்தை சேர்ந்தவர் தீபிகா(21)பி.காம். பட்டதாரியான தீபிகாவின் அம்மா துரித உணவகம் நடத்தி வந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்(27). சரக்கு ஆட்டோ டிரைவரான கதிரேசன் அடிக்கடி தீபிகாவின் தாயார் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்ற போது, கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்  நிலைய  சப் இன்ஸ்பெக்டர் மேனகா இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் மணமகன் வீட்டிற்கு சென்றனர். ஒரே நேரத்தில் இரு காதல் ஜோடிகள் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: