டெண்டர் தர லஞ்சம் வாங்கிய போது சிக்கினார் கர்நாடக பாஜ எம்எல்ஏ மகன் கைது: கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பறிமுதல்: லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநில பாஜ எம்எல்ஏ மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக் ஆயுக்தா போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரது அலுவலகம், வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.8.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தொகுதி பாஜ எம்எல்ஏ கே.மாடால் விருபாட்சப்பா. இவரது மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக ஆட்சி பணி (கே.ஏ.எஸ்) அதிகாரியான இவர் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைமை தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

எம்எல்ஏ கே.மாடால் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான கர்நாடக மாநில சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்) தலைவராக இருந்து வருகிறார். கே.எஸ்.டி.எல். நிறுவனத்திற்கு கச்சா பொருட்கள் சப்ளை செய்ய டெண்டர் கொடுப்பது தொடர்பாக பெங்களூருவில் இயங்கி வரும் செமிக்சில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குதாரர் ஸ்ரேயாஸ்கஷ்யப்பிடம் பிரசாந்த் மாடால் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று பேரம் பேசியதில் ரூ.40 லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

லஞ்சம் கேட்கும் தகவலை கர்நாடக மாநில லோக்ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுப்ரமணியராவ் கவனத்திற்கு ஸ்ரேயாஸ்கஷ்யப் கொண்டு சென்றார். அவர் வழிகாட்டுதல் படி நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவின் கே.எஸ்.டி.எல். அலுவலகத்தில் ஒப்பந்ததாரிடம் பிரசாந்த் மாடால் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது,  லோக் ஆயுக்தா போலீஸ் எஸ்பி. போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர். கேஎஸ்டிஎல் தலைவராக இருக்கும் தனது தந்தைக்காக மகன் பிரசாந்த் லஞ்சம் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.2.02 கோடி கணக்கில் வராத ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பிரசாந்த் மாடால் வங்கி கணக்கில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பலர் பெயரில் ரூ.94 லட்சம் டெபாசிட் செய்துள்ளதும் கண்டு பிடித்தனர். இதனிடையே எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவின் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு ரசீது எதுவுமில்லை. அந்த பணம் அலுவலகத்திற்கு சொந்தமானது என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்று லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: அதை தொடர்ந்து பிரசாந்த் மாடாலுக்கு சொந்தமான பெங்களூரு கிரிசன்ட் சாலையில் உள்ள அலுவலகம், சஞ்சய்நகரில் உள்ள வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பறிமுதல் செய்து பல முக்கிய ஆவணங்கள், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர், லஞ்சம் வாங்க உதவியாக இருந்த சுரேந்தர், சித்தேஷ், ஆல்பர்ட் நிகோலா, கங்காதர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். பிரசாந்த் மாடால் வீட்டில் மட்டும் ரொக்க பணமாக ரூ.6 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் மொத்தம் ரூ.8 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்தனர்.

எம்எல்ஏ தலைமறைவு: இதனிடையில் இப்புகார் தொடர்பாக லோக்ஆயுக்தா போலீசார் ஊழல் தடுப்பு சட்டம்-1988 ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக  எம்எல்ஏ மாடால் விருப்பாட்சப்பா, இரண்டாவது குற்றவாளியாக பிரசாந்த் மாடால் மற்றும் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பிரசாந்த் மாடால் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பெங்களூரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். குற்றவாளிகளை 5 பேரையும் மார்ச் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா தலைமறைவாகி உள்ளார். இதற்கிடையே  கேஎஸ்டிஎல் தலைவர் பதவியை எம்எல்ஏ மாடால் விருப்பாட்சப்பா ராஜினாமா செய்தார்.

* ஆளும் கட்சிக்கு நெருக்கடி

மாநில சட்ட பேரவைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பொது தேர்தல் நடக்கும் நிலையில் ஆளும் கட்சி எம்எல்ஏவின் மகனும் கேஏஎஸ் அதிகாரியுமான பிரசாந்த் மாடால் லஞ்சம் வாங்கி சிக்கி கொண்டிருப்பது ஆளும் பாஜவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்துள்ள பிரசாந்த் மாடாலுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், நண்பர்கள் வீடுகளில் தொடர்ந்து லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: