நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்குத்தண்டனை: மும்பை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு

மும்பை: நடிகை லைலா கான், அவருடைய தாயார் ஷெலீனா உட்பட 6 பேரை கொலை செய்த வளர்ப்பு தந்தை பர்வேஸ் தக்கிற்கு செசன்ஸ் கோர்ட் நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை லைலா லைலா கான் அவரது தாயார் மற்றும் உடன் பிறந்தவர்கள் என மொத்தம் 6 பேர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காணவில்லை. இதுதொடர்பாக லைலாகானின் தாய் ஷெலீனாவின் முதல் கணவர் நதீர் பட்டேல், ஒஷிவாரா போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், கடைசியாக பர்வேஸ் தக், இந்த 6 பேருடன் நாசிக் அருகில் இருக்கும் இகத்புரியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த பண்ணை வீட்டுக்கு போலீசார் சென்ற போது பண்ணை வீடு முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. போலீஸ் விசாரணையில் பர்வேஸ் தக் காஷ்மீருக்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த போலீசார், லைலாகானின் வளர்ப்பு தந்தை பர்வேஸ் தக் என்பவரை கைது செய்தனர்.

அவரை மும்பை கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது சொத்து தகராறில் ஷெலீனாவை கொலை செய்ததாகவும், பின்னர் லைலா உட்பட 5 பேரையும் கொலை செய்துவிட்டு இகத்புரி பண்ணை வீட்டில் சடலங்களை புதைத்ததாகவும், பின்னர் வீட்டை எரித்ததாகவும் பர்வேஸ் ஒப்புக்கொண்டார். உடனே பண்ணைக்கு விரைந்து போலீசார் 6 பேரின் சடலங்களையும் அழுகிய நிலையில் மீட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி சச்சின் பவார், பர்வேஸ் தக் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை விபரம் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று தண்டனை விபரத்தை நீதிபதி அறிவித்தார். அப்போது பர்வேஸ் தக்கிற்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

The post நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்குத்தண்டனை: மும்பை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: