கச்சத்தீவு, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் 1971ல் மோடி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்..? கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா குறித்து சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: கச்சத்தீவு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பிரதமர் மோடி பேசியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார். தேர்தல் நேரத்தில் பாஜகவால் கிளப்பப்பட்ட கச்சத்தீவு விவகாரம், தேசிய அரசியலில் பேசு பொருளாக அமைந்தது. அப்போது பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்திருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட புதிய தகவல்களின் மூலம் அம்பலமாகி உள்ளது. இந்த புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரசை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது.

நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது’ என்று பதிவிட்டார். கச்சத்தீவு விசயத்தை தனது அரசியல் லாபத்துக்காக பாஜக பேசி வருவதாக அப்போது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்திலும் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்து பேசியது. சமீபத்தில் தெலங்கானா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எதிரி நாட்டின் (பாகிஸ்தான்) மீது போர் தொடுக்கும் தைரியம் காங்கிரசுக்கு உள்ளதா? அத்துமீறி நமது நாட்டின் எல்லையில் நுழையும் எதிரி நாட்டினரை நம்முடைய ராணுவ வீரர்கள் துவம்சம் செய்துள்ளனர். அவர்களை ஓட ஒட விரட்டி அடித்துள்ளோம். 3வது முறையாக மோடி பிரதமர் பதவியேற்றதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கண்டிப்பாக மீட்கப்படும்.

காஷ்மீர் என்றென்றும் நம்முடைய நாட்டின் ஓர் அங்கம்தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதிகள் காப்பாற்றப்பட்டு வந்தனர். ஆனால், தீவிரவாதத்தை பிரதமர் மோடி வேரோடு அழித்துள்ளார்’ என்றார். ஏற்கனவே எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து வாய் பேசாத பாஜக, தற்போது பாஜக ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாக கூறுவதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அரியானாவில் பேசிய மோடி, ‘1971ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் 90,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். அந்த நேரத்தில் நான் பிரதமராக ஆட்சியில் இருந்திருந்தால், பாகிஸ்தானில் இருக்கும் குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பை கையகப்படுத்தி இருப்பேன். பின்னர் சரணடைந்த பாகிஸ்தான் வீரர்களை விடுவித்து இருப்பேன். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, குருநானக் தேவ் தனது இறுதி காலத்தை கழித்த கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானின் பஞ்சாபில் சேர்ந்தது. நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

அவர்கள் அதை அதிகாரத்திற்காக செய்தனர். கடந்த 70 ஆண்டுகளாக, கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை தூரத்தில் இருந்தே வணங்கி வருகிறோம்’ என்று பேசினார். இவ்வாறாக காங்கிரசை குறைகூறும் வகையில் கடந்த கால வரலாற்றோடு தொடர்புபடுத்தி தேர்தல் காலங்களில் பாஜக தலைவர்கள் ெதாடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 1950ம் ஆண்டு பிறந்த மோடி 1971ல் தான் ஆட்சியில் இருந்திருந்தால் என்று பேசுவது, சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் நாட்டின் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வகுப்புவாதம், வெறுப்பு பேச்சுகள் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றை செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பாஜக சர்ச்சை கருத்துகளை கூறிவருவதாக எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

The post கச்சத்தீவு, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் 1971ல் மோடி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்..? கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா குறித்து சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: