சிவகாசி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறு விறு

*அடுத்த மாதம் விநியோகம் தொடக்கம்

*மீட்டர் பொருத்தும் பணி ஸ்பீடு

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் செயல்படுத்த பட்டு வரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.சிவகாசி மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைபடுகிறது. வெம்பக்கோட்டை அணை, மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது 45 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையாளர் மாநகராட்சி பகுதியில் 6 நாட்களுக்குஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகாசி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக போக்க ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் கிணறுகள் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில் வழியாக குழாய்கள் பதித்து சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் எடுத்து வரப்படுகிறது. இத்திட்டத்தில் சங்கரன் கோவிலில் தரை மட்ட நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கபட்டுள்ளது.

பழவூரில் இருந்து குடிநீர் குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு இங்கு தேக்கி வைக்கப்படும். இங்கிருந்து புளியங்குடி, சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளுக்கு தனியாக குழாய் பதித்து தாமிரபரணி நீர் கொண்டு வரப்படுகிறது. சிவகாசி மாநகராட்சியில் தற்போது தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக சிவகாசி அம்பேத்கார் சிலையி்ன் பின்புறம் 4 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலைநீர்தேக்க தொட்டி, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 3 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலைநீர் தேக்க தொட்டி கட்டி முடிக்க பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டிகளில் தாமிரபரணி நீர் தேக்கி பொதுமக்களுக்கு விநியோகிக்க படவுள்ளது.

இதே போல் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. குழாய் பதிக்கும் பணிக்காக சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிதாக சாலை போடும் பணிகள் நிறுத்தி வைக்க பட்டிருந்தது. தற்போது இப்பணிகள் முடிவடைந்துள்ளதால் சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் இறுதிக்குள் தாமிரபரணி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சிவகாசி மாநகரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் குடிநீர் விநியோகம் மற்றும் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த குழாய்களை இணைக்க பட்டு தண்ணீர் லீக் உள்ளதா என சோதனை நடத்தும் பணி முதலில் துவங்கபடவுள்ளது. திருத்தங்கல் நகரில் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் மட்டுமே நடைபெற்றுள்ளது.

எனவே இங்கு மட்டும் காலதாமதம் ஏற்படலாம். தாமிரபரணி திட்டத்தில் தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். சிவகாசி மாநகரில் வீடுகளில் குடிநீர் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்ததும் இத்திட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடங்க படும். இதன் மூலம் சிவகாசி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவை நிரந்தரமாக தீர்க்கபடும்.

Related Stories: