வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அருங்காட்சியகம் சென்றடைந்தது: தமிழ், கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது

பொன்னை: பொன்னை அருகே வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் 2 கல்வெட்டுகள் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு தொல்லியல் துறை சார்பில், கிபி 10ம் நூற்றாண்டின் இராட்டிரகூட மன்னன் 3ம் கிருஷ்ண கன்னர தேவனின் 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை ஆவணப்படுத்தும் பணியை நேற்று மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரிகள் வள்ளிமலை பகுதியில் இருந்த 2 கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கல்வெட்டுகளை மீட்டு வேலூர் கோட்டையில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர். மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தொல்லியல் துறையினர் கலந்து கொண்டு இப்பணிகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இக்கல்வெட்டு தமிழ், கன்னட ஆகிய இரு மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தில் நடந்த விகட சக்கரம் என்ற நிகழ்ச்சியில் விகடப்புலமை வெளிப்படுத்தியும், மேல்பாடிக்கு சென்று சோழர் கால கணக்கு பார்த்தல், சோழ இளவரசனாகிய ராஜாத்தியணை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது’ என கூறினர்.

The post வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அருங்காட்சியகம் சென்றடைந்தது: தமிழ், கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: