தொளவேடு - ஏனம்பாக்கம் பகுதியில் ஆரணியாற்றில் 4 வருடமாக உடைந்து கிடக்கும் தடுப்புகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆரணியாற்றின்  குறுக்கே உள்ள  பாலத்தில் 4 வருடமாக உடைந்து  கிடக்கும்  தடுப்புகளை சீரமைக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம்  ஒன்றியத்தில் தொளவேடு  கிராமம் உள்ளது. இதைச்சுற்றி காக்கவாக்கம், தும்பாக்கம், கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை , மேல்மாளிகைப்பட்டு , கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ - மாணவிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் விவசாய பொருட்கள் வாங்க, வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும்  இக்கிராமத்தையொட்டி உள்ள தொளவேடு -  ஏனம்பாக்கம் இடையே  ஆரணியாற்றில் இறங்கி  தண்டலம் செல்லவேண்டும். பின்பு அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை  ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும். மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த 20 கிராம மக்கள் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாகவும் 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.

இதனால், தொளவேடு - ஏனம்பாக்கம் ஆரணியாற்றின் இடையே, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் ரூ.6 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் 20 கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் கடந்த  4 வருடத்திற்கு முன்பு திடீரென உடைந்துவிட்டது. இதனால் இரவு நேரத்தில் கிராமங்களுக்கு செல்லும் இருசக்கர  வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.  பாலத்தின் தடுப்புகள் உடைந்தது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை.

எனவே பாலத்தின் தடுப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும்  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ‘‘தொளவேடு - ஏனம்பாக்கம் ஆரணியாற்றின் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு  பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த  4 வருடத்திற்கு முன்பு  உடைந்து சேதமடைந்துள்ளது. நாங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றால் உடைந்துபோன பாலத்தின் தடுப்பில் இருந்து ஆடு,  மாடுகள் கீழே விழுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பாலத்தின் தடுப்புகளை சீரமைத்து தர வேண்டும்.’’ என கோரிக்கைவைத்தனர்.

Related Stories: