காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே டூ வீலரில் சென்ற மாற்றுத்திறனாளி, சாலை வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி விழுந்து பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் அருண்குமார் (25). எலக்ட்ரிகல் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 21ம் தேதி ஆனம்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வருவதற்காக உத்திரமேரூர் சாலையில் தன்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மேல்பேரமநல்லூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, மாகறல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.