ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் 238 வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வரவு-செலவு கணக்குகளை வேட்பாளர்கள் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.

Related Stories: