நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ. 300 கோடி வரை இலக்கு.. 700 மாணவர்களுக்கு விற்க திட்டம் : தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்

டெல்லி :நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நீட் வினாத்தாள் மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, நீட் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.வினாத்தாள் அடங்கிய பெட்டிகளை சாதுர்யமாக உடைத்து அவற்றை திருடி விற்று வந்துள்ளது பிஜேந்தர் குப்தா கும்பல். வினாத்தாள் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக பல போக்குவரத்து நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் உள்ளன. கருப்புப் பட்டியலில் இருந்தபோதும் பல தில்லுமுல்லு செய்து வினாத்தாள் எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தை அவை பெற்று வந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.

மேலும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ. 300 கோடி வரை இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாகவும், 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டமிட்டதாகவும் வினாத்தாள் மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா பரபரப்பு தகவல் அளித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய சஞ்சீவ் முக்யாவை பிடிக்க முடியாது எனவும் பிஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு குறித்து மார்ச் மாதத்திலேயே வீடியோ வெளியிட்டவர் பிஜேந்தர் குப்தா. வினாத்தாள் திருட்டு மற்றும் விற்பனையில் 24 ஆண்டுகளாக ஈடுபட்டு வருபவர் பிஜேந்தர் குப்தா ஆவார். உத்தரப் பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த பிஜேந்தர் குப்தா அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் அரசு தேர்வுகள் மாஃபியா கும்பலின் தயவில் நடப்பதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் குற்றசம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை ஆதரிப்பவர்கள், வினாத்தாள் மோசடி கும்பலை ஊக்குவிக்கிறார்கள். வினாத்தாள் மோசடி கும்பல், நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் வாழ்க்கையை சிதைகின்றன. கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் ஊடுருவல் காரணமாக தகுதிவாய்ந்த இந்தியர்கள் பாதிப்பிறகு உள்ளாகி உள்ளனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ. 300 கோடி வரை இலக்கு.. 700 மாணவர்களுக்கு விற்க திட்டம் : தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: