நாகர்கோவிலில் மார்ச் 6ம் தேதி தோள் சீலை போராட்டம் 200வது ஆண்டு நிறைவு மாநாடு: தமிழ்நாடு, கேரள முதல்வர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மார்ச் 6ம் தேதி நடைபெறும் தோள்சீலை போராட்ட 200வது ஆண்டு நிறைவு மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதியான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் திருவிதாங்கூர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஜாதிய அடக்கு முறைகள் மேலோங்கி இருந்தன. அப்போது குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 1822 மே மாதம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரங்களும் ஏற்பட்டன.

 

இதனை தொடர்ந்து 1823ல் நீதிமன்ற உத்தரவுபடி, சீர்திருத்த கிறிஸ்தவர்கள் தோள்சீலை அணியலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வாறு நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டை நினைவுகூரும் வகையில் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மார்ச் 6ம் தேதி மாலை, தோள் சீலை போராட்ட 200வது ஆண்டு நிறைவு மாநாடு நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உட்பட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

Related Stories: