நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டதால் அமராவதி அணை நீர்மட்டம் 60 அடியாக சரிந்தது

உடுமலை : மழையின்மை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டதால், அமராவதி  அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணை நீர்மட்டம் 60 அடியாக  சரிந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி  அணை  90 அடி உயரம்கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர்,கரூர்  மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று  வருகிறது.

இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2  ஆயிரம் ஏக்கர் விளை நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது.தென்மேற்கு  பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும்,வடகிழக்கு பருவமழை காலமான  அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். பாசனத்துக்கு  மட்டுமின்றி நூற்றுக்கணக்கான கிராமப்பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.

இந்த அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க  முடியும். பருவமழைக் காலங்களில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான  கேரளாவின் பாம்பாறு, கொடைக்கானல் பகுதியின் கூட்டாறு, வால்பாறை அக்காமலை  பகுதியில் இருந்து வரும் சின்னாறு, தேனாறு ஆகியவற்றில் தண்ணீர்  பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அமராவதி அணைக்கு வந்து  சேர்கிறது.

கடந்த  டிசம்பரில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருந்தது. அதன்பிறகு பருவமழை  காலம் நிறைவு பெற்றதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது. இதனால்  மேற்கண்ட ஆறுகளில் தண்ணீர் குறைந்து வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளன.  அணைக்கு நீர்வரத்து உள்ள புங்கனோடையும் வறண்டு கிடக்கிறது. இதனால்  அணைக்கு நீர்வரத்து இல்லாமல் போய்விட்டது. தற்போது அணையில் நீர்மட்டம்  60 அடியாக உள்ளது.  பாசனத்துக்கும், குடிநீருக்கும் 840 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதுகுறித்து  நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாசனத்துக்கு வழங்கப்படும்  தண்ணீரையும், குடிநீருக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரையும் விவசாயிகளும்,  பொதுமக்களும் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தற்போது  அணையில் பாதிக்கு மேல் நீர்மட்டம் உள்ளது. எனவே, குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படாது. கோடை மழை பெய்தால் நீர்மட்டம் உயர வாய்ப்புண்டு. இருப்பினும் 3  மாதங்களில் பருவமழை துவங்கிவிடும். அதுவரை சிக்கல் எதுவும் ஏற்படாது”  என்றனர்.

Related Stories: