அரூர் புறவழிச்சாலையில் மரவள்ளி கிழங்கு திப்பி கழிவுநீரை கொட்டிச்செல்லும் லாரிகள்-கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

அரூர் : அரூர் புறவழிச்சாலையில் அரைக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு திப்பியை, திறந்த நிலையில் லாரிகளில் ஏற்றிச்செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் சிந்தும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மரவள்ளி கிழங்குகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சேகோ ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அங்கு இயந்திரங்கள் மூலம் மரவள்ளி கிழங்கை அரைத்து, அதில் இருந்து சேமியா, ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. பின்னர் அரைக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு கழிவான திப்பியை, காகித ஆலைகளில் பேப்பர் தயாரிக்கவும், ஜவுளி துறையில் துணிகளுக்கு மொடமொடப்பை கொடுக்க பசை தயாரிக்கவும், மருத்துவ துறையில் மாவு கட்டு போடவும் பயன்படுத்தி வருகின்றனர்.

சேலம், ஆத்தூர், தர்மபுரி மாவட்ட சேகோ பேக்டரிகளில் இருந்து, மரவள்ளி கிழங்கு திப்பியை, ஈரத்துடன் லாரிகளில் லோடு ஏற்றி, அரூர் வழியாக கொண்டு செல்கின்றனர்.

லாரிகளில் திறந்தவெளியில் கொண்டு செல்வதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மாவு வழிநெடுகிலும் கொட்டி கொண்டே செல்வதால், அந்த சாலையில் டூவீலர்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து அடிபடுகின்றனர்.எனவே, மரவள்ளி கிழங்கு திப்பியை, திறந்த நிலையில், சாலையில் கொட்டியபடி கொண்டு செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: