பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரத்தில் பொதுப்பணித்துறை அனுமதியின்றி ஏரி மீன்கள் பிடித்து விற்பனை

* ஏலம் விடாததால் அரசுக்கு இழப்பு

* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் குட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு உத்திரகாவேரி ஆற்றிலிருந்து அகரம் ஆறு வழியாக தண்ணீர் வருகிறது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக பெய்த கனமழையினால் ஏரி முழுவதும் நிரம்பி வழிந்தது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரானது விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக திருப்பி விடப்படுகிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளாககே ஏரியில் தண்ணீர் நிரம்பியே உள்ள நிலையில் பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் காணப்பட்டது.

இந்த மீன்களை கடந்த 2 ஆண்டுகளாக கிராமத்தை சேர்ந்த சிலர் கூட்டம் கூட்டமாக வந்து முறைகேடாக பிடித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.  தற்போது ஏரியில் பாதியளவுக்கு மேல் தண்ணீர் வற்றிவிட்ட நிலையில் சிலர் குழுக்களாக வந்து ஏரியில் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். அதில், கொறவை, விலாங்கு, அனமீன் உட்பட பல வகையான மீன்களை கிலோ ₹50, ₹100, ₹150 என விலை நிர்ணயம் செய்து கல்லா கட்டி வருகின்றனர்.

இதை பொதுப்பணித்துறையினர் முறையாக கண்காணித்து 3 ஆண்டுகளா மீன்களை பிடிக்க குத்தகை விடப்பட்டிருந்தால் இதன் மூலம் அரசுக்கு சில குறிப்பிட்ட தொகை வருமானமாக வந்திருக்கும். எனவே, ஏரியில் தினந்தோறும் டன் கணக்கில் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருபவர்களை கண்டறிந்து பொதுப்பணித்துறை நிர்வாகிகள்  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து கால்வாய் தூர்வார கோரிக்கை

பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள குட்டி ஏரிக்கு உத்திர காவேரி ஆற்றிலிருந்து அகரம் ஆறு வழியாக நீர்வரத்து உள்ளது. ஆனால், நீர்வரத்து கால்வாய்கள் புதர்கள் மண்டி, குப்பைகளாக காணப்படுவதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விவசாய நிலங்களுக்கு பாசனநீர் எடுப்பதற்கு சிரமமாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நீர்வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: