ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் டெல்டா விவசாயிகள் சென்னை பயணம்

திருச்சி: ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து இன்று 500 விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். கரும்பு டன்னுக்கு ரூ.8100 தருவதாக உறுதி அளித்த ஒன்றிய அரசு ரூ.2900 அளித்து வருகிறது. அதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தராமல் டன்னுக்கு ரூ.1250 மட்டுமே தருகின்றன. அந்த தொகையும் குறித்த நேரத்தில் தருவதில்லை. இதை கண்டித்தும். 50 வயதை கடந்த விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும். தனி நபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை  ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி சென்று போராட முடிவு செய்தனர்.

ஆனால் அவர்கள் டெல்லி செல்ல போலீசார் அனுமதிக்காத நிலையில், சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து திருச்சியிலிருந்து இன்று காலை 7 மணிக்கு அய்யாக்கண்ணு தலைமையில் 138 விவசாயிகள் ரயிலில் சென்னை புறப்பட்டு சென்றனர். இதேபோல் கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து சுமார் 350 விவசாயிகள் சென்னை சென்றனர்.

சென்னையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கி முன் போராட்டம் நடத்த உள்ளனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், கரும்பு நிலுவை தொகையை முழுமையாக வழங்க வேண்டும். தனிநபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்ச் மாத இறுதியில் டெல்லி சென்று போராட உள்ளோம். எங்களை தமிழக போலீஸ் மறிக்க கூடாது. இதை தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றார்.

Related Stories: