வெறி நாய் கடிக்கு 5 தடுப்பூசி போட்டால் ரேபிஸ் ஒழிந்து விடும்-கால்நடை மண்டல இணை இயக்குனர் தகவல்

அன்னூர் :  வெறி நாய் கடிக்கு 5 ஊசிகள் போட்டால் ரேபிஸ் கிருமி முழுமையாக  ஒழிந்து விடும் என கால்நடை மண்டல இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், அன்னூர் தாலுகாவில் வெறி நோய் மற்றும் தெருநாய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையில் இதற்கான தடுப்பூசி போடப்பட்டாலும், வெறி நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம் அன்னூர் அருகே பொன்னேகவுண்டன்புதூரில் நேற்று நடந்தது.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி பேசியதாவது : உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 லட்சம் பேர் ராபிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் கடித்தாலோ, அதனுடைய உமிழ் நீர் பட்டாலோ நோய் பரவும் அபாயம் உள்ளது. கடிபட்டவுடன் 21 நாட்களுக்குள் ஊசி முழுமையாக போடாவிட்டால், அது மூளையை தாக்கி இறப்பு நிச்சயம் ஏற்பட்டு விடும்.

வெறி நாய் கடி ஏற்பட்ட உடனே ஒரு ஊசி, அதன் பிறகு 3வது நாள், 7வது நாள், 17 வது நாள், 28 வது நாள் என 5 ஊசிகள் போட்டால் ரேபிஸ் கிருமி முழுமையாக ஒழிக்கப்பட்டு விடும்.  எனவே வெறி நாய் கடி குறித்தும், செல்ல பிராணிகளை பாதுகாப்பாக வளர்ப்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 நாய், பூனை ஆகியவை பிறந்த 3 மாதங்களிலேயே ஒரு தடுப்பூசி போட வேண்டும். அதிலிருந்து 21வது நாள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போட வேண்டும். இதனால் அந்த நாய்க்கும் பாதுகாப்பு ஏற்படும். நாய் கடித்தாலும் பிறருக்கும் பாதிப்பு ஏற்படாது. எனவே இதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அரசு பள்ளி மாணவ, மாணவியர் பலர் அதிகாரிகளிடம் வெறிநாய் கடி குறித்தும், ரேபிஸ் நோய் குறித்தும் கேள்விகள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், ‘‘நாய் கடித்து காயம் ஏற்பட்டால் கண்டிப்பாக அதற்கான 5 ஊசிகள் போட வேண்டும். வெறும் பற்கள் மட்டும் பதிந்து காயம் ஏற்படாவிட்டாலும் உறுதியாக ஊசி போட வேண்டும். காயத்தை விட பற்கள் பதிந்தது இன்னும் அபாயம் அதிகம். எனவே வைரஸ் பரவுவதற்கு முன்பாகவே உடனடியாகவும், பிறகும் அதைத் தொடர்ந்து நான்கு ஊசிகளும் கண்டிப்பாக போட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளும் இலவசமாக ரேபிஸ் நோய்க்கான தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை கணக்கெடுப்பின்படி 96 ஆயிரம் கால்நடை செல்லப்பிராணிகள் உள்ளன. செல்லப்பிராணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முறையாக தடுப்பூசி போட்டால் 95% அந்தப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் வரும் வாய்ப்பு இல்லை. அன்னூர் வட்டாரத்திலும் தெருவில் திரியும் நாய்களில் 90 சதவீதம் நாய்களுக்கு ரேபிஸ் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே தெரு நாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விலகி இருக்க வேண்டும். குழந்தைகள் மாணவ, மாணவியர் நாய்களை தொட்டு விட்டாலோ, நாய்களின் உமிழ் நீர் பட்டாலோ உடனடியாக தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். கால்நடை மருத்துவமனைக்கு 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கால்நடைகளான நாய், பூனை ஆகியவற்றை அழைத்து வரக்கூடாது’’ என்றனர்.

மேலும் அதிகாரிகள் பேசுகையில், ‘‘நாய் கடித்த பிறகு ஊசி போடும்போது ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. இறைச்சிகளை சாப்பிடும்போது அதில் புரதம் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். விரைவில் குணமாகும். எனவே தடுப்பூசி போடும்போது ஆட்டு இறைச்சி கோழி, இறைச்சி தாராளமாக சாப்பிடலாம். எந்த பத்தியமும் இல்லை’’ என்றனர்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோ, ஓய்வு பெற்ற ராணுவ கர்ணல் ராகுல் தேவ், ஊராட்சித் தலைவர் புஷ்பவதி, கால்நடை மருத்துவர் சதீஷ், கனகராஜ், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், செல்ல பிராணிகள் வளர்ப்போர், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் செல்லப்பிராணிகள் குறித்தும் வெறிநோய் குறித்தும் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்று வழங்கப்பட்டது. சிறந்த செல்லப்பிராணிகள் தேர்வு செய்யப்பட்டு அதை வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வெறிநோய் தடுப்பூசி முகாம் 500 பேர் பங்கேற்றனர்.

Related Stories: