தக்கலை அருகே ஓடும் பஸ்சில் கூர்மையான ஆயுதம் கிழித்து பெண், குழந்தைக்கு காயம்-செயின் பறிக்கும் முயற்சியில் தாக்கப்பட்டனரா?

குமாரபுரம் :  மண்டைக்காடு கோயிலுக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை மீது கூர்மையான பொருள் கிழித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. செயின் பறிக்கும் முயற்சியில் யாரேனும் தாக்கினரா என போலீசார் விசாரணை நடத்தினர்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு பகுதியை சேர்ந்தவர்கள் ஷைஜா ராணி,பிரியா, பத்மலதா, இவரது பேத்தி ஆதிரா, சாந்தா,  ஆகியோர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு செல்ல நேற்று காலை 7.30 மணியளவில் தக்கலைக்கு வந்தனர்.

அங்கிருந்து மண்டைக்காட்டிற்கு பஸ் ஏறினர். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. திடீரென ஷைஜா ராணியின் கையிலும், ஆதிராவின் முதுகிலும் கூர்மையான பொருள் கிழித்துள்ளது. இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் வலியால் அலறினர். இதையடுத்து பஸ்சில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் யாராவது செயின் பறிக்கும் முயற்சியில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இருக்கலாம் என நினைத்த டிரைவர் பஸ்சை தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு போலீசார் பயணிகளை சோதனையிட்டனர்.

ஆனால் யார் பையிலும் கூர்மையான பொருள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து பஸ் புறப்பட்டு சென்றது. இதற்கிடையே காயமடைந்த இருவரும் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: