செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: இந்தியாவில் முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்ந்து வருகிறது. தேசியளவில் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை இப்போதும் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி சென்னைக்கு வருகிறார்கள். மேலும், வணிகம், தொழில் சம்பந்தமாகவும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்து போகும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது.

இதனால் கோடிக்கணக்கான மக்களை தாங்கும் அளவுக்கு சென்னையை விரிவாக்கம் செய்வதும், அதற்கான வளர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். வளர்ச்சிக்கு ஏற்ப வசதிகளையும் மேம்படுத்தினால் தான் மக்களின் வாழ்க்கை தரமும் சிறப்பாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவின் பெருநகர பட்டியலில் சென்னை மாவட்டத்தை கொண்டு வரும் நோக்கில் 2011ம் ஆண்டு சென்னை புறநகரில் இருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை இணைத்து 424 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை மாநகராட்சி எல்லையை அரசு சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதன்படி தற்போது 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் விரைவில் சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250ஆகவும், மண்டலங்களின் எண்ணிக்கை 20ஆகவும் மாறவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளும், அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள் என மொத்தமாக 50 ஊராட்சிகள் சென்னையுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக திருப்போரூர் தொகுதியில் உள்ள நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மேடவாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், ஒட்டியம்பாக்கம், ஆலந்தூர் தொகுதியில் உள்ள மூவரசம்பட்டு, அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பரணிபுத்தூர், மவுலிவாக்கம், தரப்பாக்கம், கோவூர், பெரிய பணிச்சேரி, இரண்டாம் கட்டளை, தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மலையம்பாக்கம், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் சென்னையுடன் இணைக்கப்பட உள்ளன.

மேலும், மதுரவாயல் தொகுதியில் உள்ள வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செந்நீர்குப்பம், நசரத்பேட்டை, மேப்பூர், அகரம் மேல், வரதராஜபுரம், பாரிவாக்கம், மாதவரம், அன்னம்பேடு, வெள்ளானூர், மோரை, வடகரை, கிராண்ட்லைன், புள்ளி லைன், தீர்த்தக்கரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், பொன்னேரி தொகுதியில் உள்ள விச்சூர், வெள்ளிவாயல் சாவடி உள்ளிட்ட 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சிகள் படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிக அவசியமாக உள்ளது. இதனால் 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. சட்டசபை தொகுதி அடிப்படையில் மண்டலங்களையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் பரப்பளவு ஆகியவை முடிவு செய்யபடும். இதுபற்றி அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு தான் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். சென்னை மாநகராட்சி விரிவடையும் போது வரி வருவாய் பெருகும். ஒன்றிய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். உலக வங்கி நிதி உதவியும் அதிகம் பெற முடியும்.

இதனால் தரமான சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள், பூங்காக்கள், பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வர முடியும். சென்னையை போன்று தாம்பரம் மாநகராட்சியில் திரிசூலம், பொழிச்சலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் முதற்கட்டமாக இணைக்கப்படும். இதே போல் ஆவடி மாநகராட்சி இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது,’’ என்றனர்.

* 5,904 சதுர கிலோ மீட்டர்
சென்னை தற்போது 1189 சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ளது. இதனை 5,904 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூருவை விட பல மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்த சில கிராமங்கள் இடம்பெற்று இருந்தன. தற்போது காஞ்சிபுரத்தில் மேலும் சில கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல் செங்கல்பட்டை சேர்ந்த பல கிராமங்கள் சென்னை பெருநகரத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ராணிப்பேட்டையை சேர்ந்த கிராமங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. திருவள்ளூரில் இருந்தும் பல கிராமங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

* முதலீடுகளை அதிகரிக்க திட்டம்

இந்த திட்டம் மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையம் அதிக நெருக்கடி கொண்ட விமான நிலையமாக மாறிவிட்டது. இதன் காரணமாக 2வது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று 15 வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் 2வது விமானம் நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூர் பகுதியும் சென்னை பெருநகர் கட்டுப்பாட்டில் இனி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: