வீரப்பன், வீரமணியை என்கவுன்டர் செய்தவர் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்படுபவர் ஏடிஎஸ்பி வெள்ளதுரை. 1997ம் ஆண்டு எஸ்ஐ.யாக தமிழ்நாடு காவல் துறையில் பணியை தொடங்கினார். இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினா கடற்கரையில் லுங்கி அணிந்து சென்று என்கவுண்டர் செய்தார். 2004ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் பணியாற்றியுள்ளார். 2013ல் மருதுபாண்டியர் குருபூஜையின் போது திருப்பாச்சேத்தியில் எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவரை வெள்ளதுரை தலைமையிலான குழு என்கவுண்டர் செய்தது.

மேலும் மதுரையில் எஸ்ஐக்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியிலும் வெள்ளத்துரை உள்ளார் என கூறப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக வெள்ளதுரை நியமிக்கப்பட்டார். அப்போது காஞ்சிபுரம் எஸ்பியாக பணியாற்றிய சுதாகர், ரவுடிகள் ஒழிப்பில் தீவிரம் காட்டாததால், அதிகமான கொலைகள் நடந்தன. இதனால் வெள்ளத்துரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், வெள்ளத்துரை மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2013ம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையும் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பான சிபிசிஐடி விசாரணை அறிக்கை 2023ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஓய்வு பெறுவதாக இருந்த வெள்ளதுரை, மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் உத்தரவு நேற்று இரவு ரத்து செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

The post வீரப்பன், வீரமணியை என்கவுன்டர் செய்தவர் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: