தாளவாடி மலைப்பகுதியில் பசுமாட்டை வேட்டையாடிய சிறுத்தை-விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதியில் பசுமாட்டை வேட்டையாடிய சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஓசூர்  கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல். இவர், தனது 2 ஏக்கர்  விவசாய நிலத்தில் 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வைத்து பராமரித்து  வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது விவசாய தோட்டத்தில், பசு  மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி  செல்வதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, ஒரு பசு மாடு காணாமல் போனதை  கண்டு அப்துல் அதிர்ச்சியடைந்தார்.

பசுமாட்டை அப்துல் தேடிய  போது, ஒரு புதருக்குள் வயிற்றில் ரத்தக்காயங்களுடன் பசுமாடு இறந்து கிடந்ததை  கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தாளவாடி  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  வனத்துறையினர், பசுமாடு இறந்து கிடக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடியதா?  என்பது குறித்து கால் தடத்தை ஆய்வு செய்த போது சிறுத்தையின் கால் தடத்தை  வனத்துறையினர் உறுதி செய்தனர்.

 சிறுத்தை தாளவாடி அருகே உள்ள சேஷன் நகர்  பகுதியில் இருந்து வெளியேறி தாளவாடி-சாம்ராஜ்நகர் சாலையை கடந்து ஓசூர்  பகுதிக்கு சென்று பசுமாட்டை தாக்கி கொன்று அதன் உடலை இழுத்துச் சென்று  புதரில் வைத்து இறைச்சி சாப்பிட்டது தெரிய வந்தது.

 இதையடுத்து அப்பகுதி  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு  வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வனத்துறையை  சேர்ந்த  தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் சிறுத்தையை பிடிப்பது  குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என  தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.

 ஏற்கனவே, தாளவாடி அருகே உள்ள  சேஷன் நகர் பகுதியில் கடந்த வாரம் புலி, மூன்று பசு மாடுகளை வேட்டையாடி  கொன்ற நிலையில் தற்போது மீண்டும் தாளவாடி பகுதியில் சிறுத்தை, பசு  மாட்டை வேட்டையாடிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகுந்த  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: