திருவண்ணாமலை ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேர் வேலூர் சிறையில் அடைப்பு: ரூ.3 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்த கும்பல் தலைவன் உள்பட 2 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12ம் தேதி அதிகாலை ஒரே வங்கியின் 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பியது. கொள்ளையரை பிடிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் விரைந்தனர்.

இதையடுத்து கொள்ளை கும்பலுக்கு தலைவனான ஹரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்ைதச் சேர்ந்த முகமது ஆரிப்(35), புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத்(37) ஆகியோரை துப்பாக்கி முனையில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய டாடா சுமோ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்த விவரங்களும் தெரியவந்துள்ளது. 2 கொள்ளையர்களும் ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், அங்கிருந்து போலீஸ் வேன் மூலம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருவரிடமும் விடிய, விடிய வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப், ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவன் என்பதும், 10 நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

ஆனாலும், கொள்ளையடித்த பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என்ற விபரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர். பின்னர் இருவரையும் நேற்று காலை திருவண்ணாமலை கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று, ேஜஎம் 1 மாஜிஸ்திரேட் எம்.கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரது உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: