கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மகாசிவராத்திரி பெருவிழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்

கோவை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் இன்று (18.02.2023)  பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக சமய நிகழ்ச்சிகளுடன் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மகாசிவராத்திரி பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி மகாசிவராத்திரி விழா இன்று (18.02.2023) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 330 சிவாலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

முதுநிலை திருக்கோயில்களான மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் இராமகிருஷ்ணா மடம் சாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திலும், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சார்பில் நகராட்சி மைதானத்திலும், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் சார்பில் திலகர் திடலிலும், பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் சார்பில் பேரூர் ஆதீன மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் சார்பில் பாளையங்கோட்டை, அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயில் தசரா மைதானத்திலும் இன்று மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி, திருமுறை விண்ணப்பம், கயிலை வாத்தியம், கிராமிய இசை நிகழ்ச்சிகள், பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், பட்டிமன்றம், யோகா சிறப்பு நிகழ்ச்சிகள், துடும்பு ஆட்டம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

இங்கு ஆன்மிக புத்தக விற்பனை நிலையம், பல்வேறு புகழ்பெற்ற திருக்கோயில்களின் பிரசாதங்கள், பழங்கால இசை கருவிகளை காட்சிப்படுத்தும் வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் சார்பில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கௌமார மடாலய ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ராஜாமணி,  இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடைபெற்ற விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்,  நாடாளுமன்ற உறுப்பினர்  முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் எஸ். மதன்மோகன், கூடுதல் ஆணையர் ந. திருமகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: