ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பிரிந்து சுற்றும் 7 யானைகள்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 7 யானைகள், தனித்தனியாக பிரிந்து சுற்றி வருகிறது. எனவே, வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், 7 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து சுற்றி வருகின்றன. மேலும், வனப்பகுதியை ஒட்டிய சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், ஆலியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் வந்து செல்கின்றன.

இந்த யானைகள் அடிக்கடி ஓசூர்- தர்மபுரி மாநில நெடுஞ்சாலையை கடக்கிறது. எனவே, நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் போது, யானைகள் சாலையை கடந்தால், வாகன ஓட்டிகள் கவனமாக சாலையை கடக்க வேண்டும். வாகனங்கள் அதிகமான ஒலியை எழுப்பக் கூடாது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், விவசாயிகள் விறகு எடுக்கவும், கால்நடைகளை தனியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லவும் வேண்டாம். மேலும், இரவு நேரங்களில் நெல், காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டங்களுக்கு பாதுகாப்பிற்கு செல்லும் விவசாயிகள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விளை நிலங்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், தங்கள்  வீட்டின் முன்பு, இரவு நேரங்களில் மின் விளக்குகளை இரவு முழுவதும் எரியவிட வேண்டும். யானைகள் நடமாட்டம் குறித்த தகவல்களை, உடனடியாக வனத்துறைக்கு தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: