வேலூரில் நாளை கோலாகலமாக நடக்கிறது: பாலாற்றில் மயானக் கொள்ளை திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

வேலூர்: வேலூர் பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழாவுக்கான திடலை தயார்படுத்துவதில் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் மகா சிவராத்திரிக்கு மறுநாள் மயானக் கொள்ளை விழா நடக்கிறது. பிரம்மனின் அகம்பாவத்தை அழிக்க அவனது ஒரு தலையை கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போக்க கையில் கபாலம் ஏந்தி திரிந்த ஈசனின் தோஷத்தை பார்வதி அங்காளம்மனாக வந்து நிவர்த்தி செய்தார். இந்த கதையுடன் தொடர்புடைய மயானக் கொள்ளை திருவிழா நாளை 19ம் தேதி வழக்கமான விமரிசையுடன் வேலூரில் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி, விருதம்பட்டு, மோட்டூர், கழிஞ்சூர், மக்கான் பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனின் தேர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. அங்கு பாலாற்றங்கரையில் மண்ணால் தரையில் உருவாக்கப்பட்ட அங்காளம்மன் முன்பு சூறையாடல் நிகழ்வு நடத்தப்படுகிறது. மேலும் அம்மன் ஊர்வலத்தின்போது பக்தர்கள் காளி, காட்டேரி, முனீஸ்வரன், அனுமன் என பல்வேறு வேடங்கள் இட்டு ஆடி, பாடியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இவ்விழாவை காண வேலூரில் வேலூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் பாலாற்றங்கரையில் கூடுகின்றனர். எனவே, இதற்கான ஏற்பாடுகளில் விழாக்குழுவினர் மட்டுமின்றி வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று பாலாற்றங்கரையில் மேடு பள்ளங்களை சீரமைக்கும் பணியும், மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அதேபோல் வேலூரில் சலவன்பேட்டை, கஸ்பா, பென்னாத்தூர் உட்பட பல இடங்களில் மயானக்கொள்ளை விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் விழாக்குழுவினரும் உள்ளாட்சி அமைப்பினரும் நேற்று ஈடுபட்டனர்.

Related Stories: