திமுக ஆட்சி அமைந்த 3 ஆண்டில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ102 கோடி ஊக்கத் தொகை: பேரவை பதிலுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்ததுமுதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 860 வீரர்களுக்கும், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும், இதுவரை ரூ.102 கோடியே 72 லட்சம் முதல்வரால் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மற்ற வீரர்களுக்கு இணையாக, தேசிய அளவில் வெற்றி பெறுகிற மாற்றுத் திறனாளி வீரர்களுக்கும் கடந்த ஆண்டு முதல் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சத்தை முதல்வர் வழங்கினார். கடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, தமிழ்நாட்டிலிருந்து 12 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.5 லட்சமாக இருந்த ஊக்கத் தொகையை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இன்றைய தேதி வரை இதற்காக 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டுத் துறையில், ஏழை எளிய பின்புலத்திலிருந்து வரும் திறமையாளர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று முதல்வர், இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கிய திட்டம்தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைத் திட்டம்.

விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்களை வாங்கவும் நிதி உதவித் தேவைப்பட்டால், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் www.tnchampions.sdat. எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் முதல்வர் தொடங்கி வைத்து, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து முதல் நிதியாக ரூ.5 லட்சத்தை அந்த அறக்கட்டளைக்கு வழங்கினார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 375 விளையாட்டு வீரர்களுக்கு, இதுவரை ரூ.8 கோடியே 62 லட்சம் நிதியுதவியாகவும், ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை தேசிய மற்றும் சர்வதேச அளவிலானப் போட்டிகளில் 21 தங்கம் உள்பட 62 பதக்கங்களைப் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

40-க்கு 40 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது திமுக
“விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால், ஒரு சிலருடைய பெயர்கள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஓட்டப் பந்தயம் என்று சொன்னால் உசைன் போல்ட், கிரிக்கெட் என்று சொன்னால் மகேந்திர சிங் தோனி. ஒலிம்பிக் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் இருவரும் வெற்றிகளையும், பதக்கங்களையும் அடுக்கடுக்காகக் குவித்தவர்கள். ஒவ்வொரு போட்டியிலும் இவர்களுடைய சாதனைகளை இவர்களே முறியடிப்பார்கள். அதேபோன்று அரசியல் களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், களம் காணும் ஒவ்வொரு தேர்தலிலும், தனது முந்தைய சாதனையை, வெற்றியை விஞ்சுகிற அளவுக்கு தற்போது வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

அந்தவகையில் நமது திமுக அணி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி, உழைத்து, 40க்கு 40 பதக்கங்களையும் வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றிருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை பரிசளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதற்கெல்லாம் காரணம், திமுக என்னும் இந்த திராவிட அணியின் தலைவர்தான். தந்தை பெரியார் போற்றிய சமூகநீதி, பேரறிஞர் அண்ணாவால் சூட்டப்பட்ட தமிழ்நாடு எனும் பெயர், கலைஞரால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழுணர்வு இவை அனைத்தும் என்றென்றும் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை முதல்வரை பார்க்கும் போதெல்லாம் வருகின்றது’’ என உதயநிதி கூறினார். அமைச்சர் உதயநிதி பேசிய பதிலுரையின்போது உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

The post திமுக ஆட்சி அமைந்த 3 ஆண்டில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ102 கோடி ஊக்கத் தொகை: பேரவை பதிலுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: