மாநகராட்சி அருகில் இருக்கும் கிராமங்களை ஏன் இணைக்கிறோம்?.. அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்


சென்னை: சட்டப்பேரவையில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ஒரு பேரூராட்சி அருகிலோ, நகராட்சி அருகிலோ இருக்கிற நகராட்சியில் சாலைகளைப் போடுகிறார்கள். பாதாள சாக்கடை திட்டம் வருகிறது. அனைத்து வசதிகளும் வரும்போது பக்கத்தில் இருக்கிற ஊராட்சிகளுக்கு அது கிடைக்காமல் போகிறபோது பல இடங்களில் 56 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் பகுதிகளில் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென்று என்னிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். எனவே, எப்படி இருக்கிறதென்று சொன்னால், எங்கள் ஊரில் இருக்கிற ஒரு ஊரைச் சொல்கிறேன். அவர்கள் அந்த பக்கத்தில் இருக்கிற ஊரை எங்களோடு சேர்க்கக் கூடாதென்று சொல்கிறார்கள். கேட்டால் அந்த ஊர்க்காரர்கள் வந்தால் ஓட்டு மாறி, தலைவர் மாறிப்போய்விடும்; சொந்த விருப்பு வெறுப்பிற்காக சிலபேர் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதனால் வேண்டாமென்று சொல்கிறார்கள். சொந்த விருப்பு வெறுப்பை வைத்து நாளைக்கு நாங்கள் வரமுடியாது. நம் ஊர்க்காரர்கள் வர முடியாது என்பதற்காக சொல்கிறார்கள். ஒவ்வொரு ஊரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கணக்கெடுக்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் உங்களை அழைத்துப் பேசுவார். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அதை சொல்லலாம். அதனால் நீங்கள் யாரும் போராட்டம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நகராட்சி அருகிலே, ஒரு மாநகராட்சி அருகிலே இருக்கிற கிராமங்கள் அரசினுடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அதை இணைக்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையிலே இதைப் பெரிதாக்க வேண்டுமென்றெல்லாம் எண்ணம் இல்லை. எனவே, நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

The post மாநகராட்சி அருகில் இருக்கும் கிராமங்களை ஏன் இணைக்கிறோம்?.. அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: