குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு தயாரித்த பொய்கள் நிரம்பிய உரை: எதிர்கட்சிகள் சாடல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் வாசித்த உரையானது ஒன்றிய அரசின் பொய்கள் நிறைந்த ஸ்கிரிப்ட் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ, ‘‘1975ம் ஆண்டு அவசர நிலை அமல்படுத்தப்பட்டது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நேரடியான தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயம். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி பெற்றது” என்றார்.

குடியரசு தலைவர் உரைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறுகிறது என்று சொல்லப்படும் கதை… நம் விவசாயிகளை வளப்படுத்தியதா? ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக நாம் இருந்தால் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது ஏன்? அக்னிவீரர் போன்ற திட்டங்கள் ஏன்? விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? முதலீடு இருந்திருந்தால் நாம் இன்னும் வளர்ச்சியை கண்டிருப்போம்.

எமர்ஜென்சி குறித்து குடியரசு தலைவர் பேசுகிறார், எமர்ஜென்சியின் போது சிறையில் இருந்தவர்களுக்கு பாஜ என்ன செய்தது. சமாஜ்வாடி கட்சி அவர்களுக்கு மரியாதையையும், ஓய்வூதியத்தையும் வழங்கியது” என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கூறுகையில், ஒன்றிய அரசு கொடுத்த ஸ்கிரிப்டை குடியரசு தலைவர் வாசித்தார். பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை அது இன்னும் உணரவில்லை.

303ல் இருந்து 240க்கு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. 303 பெரும்பான்மையின் அடிப்படையில் அவர்கள் உரையை தயாரித்துள்ளனர்” என்றார். காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர் கூறுகையில், குடியரசு தலைவர் உரையில் புதிதாக எதுவும் இல்லை. பழைய உரையில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

The post குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு தயாரித்த பொய்கள் நிரம்பிய உரை: எதிர்கட்சிகள் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: