அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் சுவிட்ச் ஆப் ஆகும் செயலியை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தொடரமுடியுமா?.. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி


மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த வளன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விடைத்தாள் நகலை பெற ரூ275 கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு உயிரியல் பிரிவில் ரூ305, பிறபிரிவு மாணவர்களுக்கு ரூ205 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கின்ற நிலையில், அவர்களுக்கு மறுகூட்டலில் சிலநேரங்களில் அதிக மதிப்பெண் கிடைத்து விடுகிறது. விடைத்தாள் மதிப்பீட்டின்போது ஏற்படும் தவறு காரணமாகவே மாணவர்கள் மறுமதிப்பீடு கேட்கின்றனர்.

அவ்வாறு தவறு நிகழ்ந்தால் அதற்கு பொறுப்பேற்று அரசு. மாணவர்களிடம் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுபோன்ற கட்டணங்கள் பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு தான் பயன்படுத்தப்படுகின்றன’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ஆண்டுதோறும் பொதுத் தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் சுமார் 1,500 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதற்கு கட்டணம் வசூல் செய்வதில் எந்த தவறும் இல்லை. தற்போதைய இளைஞர்களை நல்வழிப்படுத்த பல வழிகள் உள்ளது.

உதாரணமாக அதிகநேரம் செல்போன் பயன்படுத்தும் இளைஞர்களை ஒழுங்குபடுத்தும் போது, அதிகநேரம் செல்போன் பயன்படுத்தினால். தானாகவே செல்போன் சுவிட்ச் ஆப் ஆகும் வகையிலான செயலியை உருவாக்ககோரி பொதுநல வழக்கு தொடரமுடியுமா? இதற்கு, வழக்கறிஞர்கள் முன்வருவார்களா என கேள்வி எழுப்பினர். மேலும், புகழுக்காகவும், விளம்பரத்திற்காகவும் தான் இது போன்ற மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

The post அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் சுவிட்ச் ஆப் ஆகும் செயலியை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தொடரமுடியுமா?.. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: