காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாமல்லன் நகர் பிரதான சாலை மற்றும் கோனேரிகுப்பம் ஊராட்சி மின் நகர், அண்ணா நகர், அசோக் நகர், திருவீதிபள்ளம், கலெக்டர் அலுவலகம், மடம் தெரு உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, நசரத்பேட்டை, புஞ்சை அரசன்தாங்கல், திம்மசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கும்பல் கும்பலாக சுற்றித் திரிகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி செல்கின்றன. ஒருசில நாய்களுக்கு தோல் நோய் ஏற்பட்டு ரோமம் உதிர்ந்து சொறி பிடித்ததுபோல் உள்ளது. இதனால், சாலைகளில் செல்வோர் பயந்துகொண்டே நடந்து செல்ல வேண்டியுள்ளது.

மேலும், சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித் திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அதிகளவில் நோய்பிடித்த தெருநாய்கள் சுற்றித் திரிவதால் மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, ரயில்வே சாலையை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது: நோய்தாக்கிய தெரு நாய்கள், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களை துரத்துகின்றன. சில இடங்களில், நோய் தாக்கியதின் காரணமாக வெறிபிடித்துள்ள தெரு நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை கடிப்பதற்காக துரத்துகின்றன. அதனால், வாகனத்தில் செல்லும் நபர்கள் பயந்து நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது. எனவே, தெரு நாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

நன்றியுள்ள பிராணியாக அறியப்படும் நாயை நாம் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அது ஒரு விலங்கு என்பதால் அதன் அடிப்படை குணம் அப்படியேதான் இருக்கும். அதற்கு பய உணர்ச்சி ஏற்பட்டால் தன்னை தற்காத்துக் கொள்ள மனிதர்களை பயமுறுத்தும். இந்த உணர்ச்சி அதிக அளவில் தூண்டப்பட்டால் மனிதர்களை கடித்துக் குதறும். இதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருப்பதால் நாய்களிடத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே, பொதுமக்களின் அச்சம் போக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் தெருநாய்களின் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* 5 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்
காஞ்சிபுரத்தை அடுத்த பள்ளூர் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் நிர்மல்ராஜ் (5). இவர் நேற்று காலை வீட்டின் பின்புறம் வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச்சென்ற தெருநாய் ஒன்று நிர்மல்ராஜ் மீது பாய்ந்து வாய்ப்பகுதியில் கடித்துள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை பாலாஜி, சிறுவனை மீட்க முயற்சி செய்தார். அப்போது, அவரையும் கடித்த தெருநாய் அங்கிருந்து தப்பியோடி உள்ளது. உடனடியாக பெற்றோர் குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவன் நிர்மல்ராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* செயல்பட்டுக்கு வருமா கருத்தடை மையம்
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், கடந்த 2015ம் ஆண்டு திருக்காலிமேடு பகுதியில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான மையம் அமைக்கப்பட்டது. தெருநாய்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இந்த நாய்களுக்குகான கருத்தடை மையம் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. இதனைத்தொடர்ந்து, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த கருத்தடை மையம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. எனவே, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த திருக்காலிமேடு நாய்களுக்கான கருத்தடை மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: