ஊட்டி-200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஊட்டி வேலிவியூ பகுதியில் ரூ.40 லட்சத்தில் ‘காட்சி கோபுரம்’: முதல்வர் சிறப்பு நிதியில் அமைக்கப்படுகிறது

ஊட்டி: ஊட்டி  - 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரூ.40 லட்சம் செலவில் ஊட்டி வேலிவியூ  பகுதியில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில்  கோத்தகிரி அருகே கொடநாடு காட்சிமுனை, குன்னூரில் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக்  காட்சி முனைகள் உள்ளன. ஊட்டியில் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் காட்சி  கோபுரம் உள்ளது. இதுதவிர முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மாயாறு  அருவியை காண்பதற்கான காட்சி கோபுரம் உள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள்  இயற்கை காட்சிகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்த்து மகிழ்கின்றனர்.

ஊட்டியின் நுழைவுவாயில் பகுதியாக வேலிவியூ பகுதி விளங்கி வருகிறது. இங்கிருந்து பார்த்தால் பெரிய பள்ளதாக்கு பகுதியாக கருத்தப்படும்  தொட்டபெட்டா சரிவில் அமைந்துள்ள கேத்தி பள்ளதாக்கு பகுதிகளும், மலை காய்கறி விவசாய நிலங்களையும் காண முடியும். ஆனால் இப்பகுதியில் எவ்வித காட்சி கோபுரமும் இல்லை. இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி பள்ளத்தாக்கு பகுதியை பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள். இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் ஊட்டி கண்டறியப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை  சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது.

கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் ஊட்டி - 200 திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிதியை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் ஊட்டி நகரின் நுழைவுவாயில் பகுதியான வேலிவியூ பகுதியில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து கோடை சீசனின் போது திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சி ஆணையர்  காந்திராஜன் கூறுகையில், ‘ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதி நகரின் நுழைவு வாயில் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் ஊட்டி-200வது ஆண்டு நிறைவை  முன்னிட்டு ரூ.40 லட்சம் செலவில் டெலஸ்கோப்பிக் வியூ பாய்ன்ட் (காட்சி  கோபுரம்) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார். ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் ஊட்டி நகரின் நுழைவுவாயில் பகுதியான வேலிவியூ பகுதியில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Related Stories: