குட்டி ஜப்பானில் தயாரிப்பு பணி தீவிரம் நோட்டு புத்தகம் விலை 25% உயர்வு

சிவகாசி: கோடை விடுமுறையை தொடர்ந்து அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியை தொடர்ந்து பெயர் பெற்றது அச்சுத் தொழில். இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடியளவில் நோட்டு, புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நோட்டுப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி சிவகாசியில் கடந்த 4 மாதமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகாசியில் தயாராகும் நோட்டுகள் தரம் மிகுந்ததாக இருப்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை அரசே விலையில்லாமல் வழங்கி வருகிறது. ஆனாலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் தேவைக்கான நோட்டுகளை கடைகளில் தான் விலைக்கு வாங்கி வருகின்றனர். இதில் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும் போதே நோட்டுகளுக்கான கட்டணத்தையும் சேர்த்து வாங்கி, மாணவர்களுக்கு நோட்டுகளையும் வழங்கி வருகின்றனர்.

சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு, கல்வி நிறுவனங்கள் நேரிடையாக வந்து, நோட்டுகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்குவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் விற்பனையாகும் நோட்டுகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. சிவகாசி அச்சகங்களில் கோடு போட்ட, போடாத நோட்டு, இரட்டைக் கோடு நோட்டு, நான்கு கோடு நோட்டு, கணக்கு நோட்டு, அக்கவுண்டன்சி நோட்டு, பிராக்டிக்கல் நோட்டு, லாங்க் சைஸ் நோட்டு என பல ரகங்களிலும், 40 பக்கம், 80 பக்கம், 120 பக்கம், ஒரு குயர், இரண்டு குயர் என பல வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

நோட்டுகளின் அட்டைகள் உறுதியாக நல்ல தரத்துடன் தயாரிக்கப்படுவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதுகுறித்து அச்சக உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘இங்கு தயாரிக்கப்படும் நோட்டுகளின் முகப்பு அட்டைகளில் உலகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்கள், இயற்கை காட்சிகள், புகழ் பெற்ற இடங்கள், வண்ண மலர்கள், வன விலங்குகள் மற்றும் டிஜிட்டல் டிசைன்கள் என கண்ணை கவரும் வகைகளில் தயாரிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட நோட்டுகள் தயாரிக்க பயன்படும் தாள்களின் விலை உயர்ந்திருப்பதாலும், நோட்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலை உயர்வினாலும் இந்த ஆண்டு நோட்டுகளின் விலை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கு தங்களுக்கு தேவையான நோட்டுகளை கல்வி நிறுவனங்களும், நோட்டு விற்பனையாளர்களும் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். ஆர்டர்களுக்கான நோட்டுகள் தயாரிக்கும் பணிகளும், தயாரான நோட்டுகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன’’ என்றனர்.

 

The post குட்டி ஜப்பானில் தயாரிப்பு பணி தீவிரம் நோட்டு புத்தகம் விலை 25% உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: