சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை முதல் குழு ஜெட்டா நகருக்கு புறப்பட்டது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்

சென்னை: சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை செல்லும் 326 பேர் கொண்ட முதல் குழுவினர் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குச் சென்றனர். அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்கா மதினாவில், ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையின்போது, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கூடுவர். அங்கு கூட்டுத் தொழுகை மற்றும் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

இதற்கு செல்பவர்கள் ஹஜ் யாத்திரை பயணிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தனி விமானங்களில் இஸ்லாமியர்கள், ஜெட்டா சென்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு, அரசும் மானிய நிதி உதவி வழங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து 5,746 பேர் ஹஜ் யாத்திரை செல்கின்றனர். அவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களின் முதல் சிறப்பு தனி விமானம், நேற்று இரவு 8.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. முதல் விமானத்தில் 326 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 9ம் தேதி வரை 17 விமானங்களில், 5,746 பேர் ஹஜ் யாத்திரைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இவர்கள் ஹஜ் யாத்திரையை நிறைவு செய்துவிட்டு, வரும் ஜூலை 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையில், 17 தனி சிறப்பு விமானங்களில், ஜெட்டாவில் இருந்து சென்னை திரும்பி வருகின்றனர். இந்த ஹஜ் யாத்திரையின் முதல் விமானத்தில் பயணம் செய்யக்கூடிய 326 பயணிகள், நேற்று மாலை 4 மணியிலிருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வர தொடங்கினர். அவர்களை வழி அனுப்பி வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் குவிந்தனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு, 10ம் எண் நுழைவுவாயில், சிறப்பு வாயிலாக ஒதுக்கப்பட்டு, அந்த வழியாக யாத்திரிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை விமான நிலையத்திற்கு வந்து யாத்திரிகர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழிகாட்டியாக 100 பேருக்கு ஒருவர் வீதம், இவர்களோடு விமானங்களில் செல்வர். அதோடு ஜெட்டா நகருக்குச் சென்ற பின்பும், அங்கும் வழிகாட்டுதலுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சுமார் 4,000 பேர் சென்றனர். இந்த ஆண்டு இதுவரையில் 5,746 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே சுமார் 6,000 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது. இவர்களுக்கு அரசு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை ஒவ்வொரு ஆண்டும், அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை முதல் குழு ஜெட்டா நகருக்கு புறப்பட்டது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: