மங்கலம்பேட்டை அருகே சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள தொட்டிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ராசாப்பாளையம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்து வந்ததால் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2021- 22ம் ஆண்டு நிதியாண்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணி அவசர கதியில் தரம் இன்றி தொடங்கப்பட்டதால் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் மீண்டும் தெருக்களிலேயே கழிவு நீர் செல்கிறது.

பல நாட்களாக செல்லும் இந்த சாக்கடை நீரால் சாலை முழுவதும் பாசி படிந்து வழுக்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளி சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகிலேயே உள்ள சாலையில் இந்த சாக்கடை நீர் செல்வதால் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் அங்கு விழுந்து எழுகின்றனர்.

மேலும் எந்நேரமும் சாக்கடை செல்வதால் அங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே அப்பகுதியில் மக்கள் மற்றும் பள்ளி சிறுவர்களின் சுகாதார நலம் கருதி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாக்கடை நீரை அகற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: