சானமாவு வனப்பகுதியில் குட்டிகளுடன் 80 யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

ஓசூர்:  ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், குட்டிகளுடன் 80க்கும் மேற்பட்ட யாtனைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த போடூர்பள்ளம் அருகே, கடந்த 2 நாட்களுக்கு முன் 60 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்நிலையில் நேற்று, குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வந்துள்ளன. தற்போது இந்த யானைகள், சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் பல குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.

இந்த யானைகளை வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு பிரிவினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். பல பிரிவுகளாக பிரிந்துள்ள யானைகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். போடூர், சானமாவு வனப்பகுதிகளில், பல இடங்களில் யானைகள் சுற்றி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் இந்த யானைகள், அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடுகின்றன.

நேற்று முன்தினம் இரவு, சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய  20க்கும் மேற்பட்ட யானைகள், நாயக்கனபள்ளி கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தின. மேலும், வனப்பகுதியையொட்டிய சினிகிரிப்பள்ளி, ராமாபுரம், அம்பலட்டி பகுதிகளிலும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற வன ஊழியர்கள் பட்டாசு வெடித்து, அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் பயிரிட்டுள்ள பணப்பயிர்களை ருசி கண்ட யானைகள், ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வந்து பிப்ரவரி வரை தங்கி சேதப்படுத்தி வருகின்றன. தென்பெண்ணை நதி வற்றாத ஜீவ நதியாக இருப்பதால், 3 போகத்திற்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நெல், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், பூசணி பரவலாக பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் இந்த யானைகளை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும், என்றனர்.

Related Stories: