திருப்பூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உகாயனூர் பகுதியை சேர்ந்தவர் தானபாண்டியன், சுடர்கொடி (35) தம்பதியினர். இவர்களுக்கு சின்னத்தங்கம், அட்சயநிதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் சின்னத்தங்கம் +2முடித்து முதலாம் ஆண்டு கல்லூரி செல்ல உள்ளார். அட்சய திதி 11-ம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு செல்ல உள்ளார். தானபாண்டியன், சுடர்கொடி தம்பதியினர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஜே ஜே நகர் பகுதியில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி இரவு சுடர்கொடி வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீரபாண்டி அருகே வந்தபோது, கண்ணில் பூச்சி அடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய சுடர்க்கொடி தனது மகள்களுடன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மகள்கள் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் சுடர் கொடியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுடர் கொடியின் உறவினர்கள் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து சுடர் கொடியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் உறவினர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் சுடர்கொடி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதால் இறந்தாலும் மற்றவர்கள் உடலில் அவர்கள் வாழலாம் என மருத்துவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதைத் தொடர்ந்து சுடர்கொடி கணவர் மற்றும் மகள்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, மருத்துவர்கள் குழு 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு கல்லீரல் சிறுநீரகம் கண் ஆகிய உறுப்புகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, ஐஸ் பாக்சில் வைத்து, மருத்துவர்களின் உதவியோடு ஆம்புலன்சில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

The post திருப்பூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Related Stories: